test

Thursday, December 12, 2013

நான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன? : T.M.மணி (உமர்பாருக்) part 2

                                                                                       முதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும்இதை நன்கு அறிந்த அம்பேத்கர், நீங்கள் இந்துவாக இருப்பதால்தான் இப்படி கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள். நீங்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி உங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் வேறொரு மதத்தில் சேர்ந்து கூடுதல் பலம் பெறுங்கள் என்று கீழ்கண்டவாறு கூறினார்.


" மதவெறியும், சாதிவேரியுமே இந்நாட்டு மக்களின் உள்ளங்களையும், நீதி முறையையும் ஆக்கிரமித்திருக்கின்ற விசித்திரமான நிலையை நான் உணர்கிறேன். இந்நாட்டில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழலுகின்ற மக்களைப் பற்றி யாரும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அப்படி யாராவது இருப்பார்களேயானால் அவர் அந்த கொடுமைகளைக் களைய முன் வருவதாக தெரியவில்லை. மனித இயலுக்கு புறம்பான தகாத செயலாக இது புலப்பட்டாலும் இந்த நாட்டில் இந்த நிலையே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்றால் அங்கு வேறு மதத்தவர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்டும் கொடுமைகளை உணராமல் இல்லை. இந்துக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது நீங்கள் ஏன்  அவர்களுக்கு உதவக்கூடாது என்று கேட்டால் அது அவர்களுக்குள்ள பிரச்சினை.

நாங்கள் அதில் தலையிட்டால் அது மதக்கலவரமாக மாறிவிடும். எங்கள் மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் நாங்கள் எல்லா உதவிகளையும் செய்வோம்" என்பார்கள். இதிலிருந்து நீங்கள் ஒன்றை உணர்வீர்கள். அதாவது, பிற மதத்தினரோடு நீங்கள் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளாமல், அதாவது தற்போதைய மதத்தை விட்டு வேறொரு மதத்தினரோடு நீங்கள் ஒன்றாய் கலந்திட வேண்டும். வேறு எவ்வழியிலும் நீங்கள் பலம் உள்ளவர்களாக ஆக முடியாது. நாங்கள் பலமற்றவர்களாக இருக்கிறவரை நீங்களும் உங்கள் எதிர்கால சந்ததியினரும் பரிதாப நிலையிலேய வாழ்வை நடத்திட வேண்டியிருக்கும்"

இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் 1936 மே 31இல் பிரகடனப்படுத்தினார். இவ்வாறு அவர் பேசியதோடு மட்டுமல்லாமல் " நான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் " என்ற உறுதியையும் வெளியிட்டார். அப்போது அவர் சீடர்களில் பலர் தாங்களும் மதம் மாறுவதாக கூறினார்கள். அவர்களிடம் நீங்கள் மாறுவதாக இருந்தால் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடுங்கள். என்று அறிவுரை கூறினார்.

அவர் நடத்திவந்த பத்திரிக்கைகளிலும் (பகிஷ்கிரிதா பாரத்) மார்ச் 15 இதழில் மதம் மாற விரும்புபர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடும்படி அறிவுரை கூறினார். அதனால் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் 1939 அக்டோபர் -29 அன்று இந்து மகாசபை மாநாடு ஒன்று பம்பாயில் கூட்டப்பட்டது. இதில் ஆயிரம் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். மதன் மோகன் மாளவியா தலைமையில் இம்மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் அம்பேத்கரின் மத மாற்றத்தை தடுப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டது. 

முதலாவதாக ஆர் எஸ் எஸ் நிறுவனர் டாக்டர் மூஞ்சேயும் பிர்லாவின் சகோதரர்களின் ஒருவரான ஜூகல் கிஷோர் பிர்லாவும், சங்கராச்சாரியும் கொண்ட மூவர் குழு அம்பேத்கரை சந்தித்து பேச முடிவெடுத்தது. 

இரண்டாவது ஒரு குழு அமைக்கப்பட்டது . இது அம்பேத்கரின் மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், அம்பேத்கரை தனிமை படுத்துவதற்காகவும் திட்டமிட்டு செய்யப்பட்டது. அதில் ஜெகஜீவன்ராம் , ஜே எம் மண்டல், தர்மபிரசாத், வி. என் . ராஜ்யோஜ், எம் சி இராஜா, பலவான், கர்பாலு இன்னும் தமிழகத்தில் மரகதம் சந்திரசேகர், மேயர் முனுசாமி பிள்ளை இன்னும் பல மாநிலங்களில் உள்ள ஏராளமான தலித் தலைவர்கள் தாரதா, ரெட்டைமலை சீனிவாசன் உட்பட காந்தியின் வலையில் வீழ்ந்தவர்கள் .

அடுத்த கட்ட தலைவர்கள் பலர் மதமாற்றத்தை நிறுத்தி வைக்கும்படி  தேர்தல் முடிந்த பிறகு நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார்கள் . அவர்கள் மீது அம்பேத்கர் கடும் கோபம் கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க , பூனா ஒப்பந்தத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் வஞ்சகமாக கைப்பற்றிக்கொண்ட நிலையில் இலண்டன் சென்றார். தீண்டப்படாத மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைத்து வகுப்புவாரிப் பிரதிநித்துவத்தை வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் உங்கள் மக்களை நீங்கள் இஸ்லாத்திற்கு போக சொன்னீர்களா? என்று அவர்கள் கேட்டதாகவும் " தனஞ்செய்கீர்" எழுதியிருக்கிறார். இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் அம்பேத்கர் மனச்சோர்வுடன் இருந்தார். பம்பாயில் கூடிய ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் எடுத்த முடிவின்படி ஆர்.எஸ் எஸ் தலைவர் மூஞ்சேயும் சங்கராச்சாரியும் ,பிர்லாவும் அண்ணல் அம்பேத்கரை சந்தித்து மூன்று நாட்கள் பேசிய ரகசிய சந்திப்பில் இஸ்லாம் கிறிஸ்தவம் சீக்கியம் இவை மூன்று மட்டுமே விவாதிக்கப்பட்டது.

பௌத்தம் அப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதைப்பற்றிய எண்ணமும் அம்பேத்கரிடம் இல்லை. இஸ்லாத்திற்கு மாறினால் இது முஸ்லிம் தேசமாகிவிடும். இந்துக்களின் அடிப்படையே தகர்ந்துபோகும். ஆகவே நாங்கள் எண்கள் உயிரை கொடுத்தேனும் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

அதே போல் நீங்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினாலும் பிரிட்டிஷாரின் அதிகாரம் இங்கு மேலோங்கிவிடும். நீங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது அவசியம் என்றால் நீகள் சீக்கிய மதத்திற்கு மாறுங்கள். நாங்களும் ஒத்துழைக்கிறோம். நீங்கள் எந்த மதம் என்று முடிவு செய்வதற்கு முன்னால் , எந்த மதம் என்பதை எங்களிடத்தில் தெரிவித்த பிறகே அறிவிக்கவேண்டும் என்ற ஒப்புதலை பெற்றிருந்தார்கள். அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் குறித்து முடிவு தெரிவிக்கும் வரை இந்த சந்திப்பும் பேச்சும் வெளிவரக்கூடாது என்ற உறுதிமொழியும் செய்துக்கொண்டார்கள்.
                                                                                                                                      தொடரும்.......

நன்றி : வைகறை வெளிச்சம் 

No comments:

Post a Comment