test

Wednesday, January 30, 2013

நமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு?

கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது.

இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாக சொல்கின்றன. பின்னால் நடக்க இருப்பவற்றையும் யூகித்து கூறுகின்றன.


முந்தைய காலங்களில் நடந்த போர்கள் சில வேலை மாதக்கணக்கில் கூட இழுக்கும், போர்த்தளபதிகளுக்கு செய்திகள் உரிய நேரத்தில் சென்று கிடைக்காததால்.

ஆனால் இன்று அப்படி அல்ல. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நமது வாசற்படிகளில் கொண்டு வந்து சேர்க்கின்றன. அதுவும் ஒரு கணத்தில் - படங்களோடு, சப்தங்களோடு , விளக்கங்களோடு.

இந்த அதிவேகத்துடன் செய்தி ஊடகங்கள் இன்னொன்றையும் தருகின்றன. அதுதான் பொழுதுப்போக்கு.  ஆம். இந்த செய்தி ஊடக உபகரணங்களில் ஒரு நிமிடம் கூட மந்த நிலை இருந்ததில்லை.  24 மணி நேரமும் செய்திகள், விமர்சனங்கள், பொழுதுப்போக்கு அம்சங்கள் ... என்று அவைகள் எப்பொழுதும் பரப்பரத்துக் கொண்டிருக்கின்றன.

செய்திகள் சொல்லப்படும்விதம் ... அப்பப்பா...கேட்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில்,  வசீகரிக்கும் குரலில், செய்திகள் சொல்லப்படுகின்றன. 

மொத்தத்தில், நமது அன்றாட வாழ்க்கையில் செய்தி ஊடகங்கள் நடுநாயகமாக, ஒரு முக்கிய  இடத்தை பிடித்திருக்கின்றன என்று சொன்னால் மிகை அல்ல.

அவைகள் எது முக்கியம், எது முக்கியம் இல்லை, எது நல்லது, எது கெட்டது என்று வரையறுக்கின்றன. அவைகள் நமது கருத்துகளுக்கு, சிந்தனைகளுக்கு, நமது பார்வைக்கு வடிவம் கொடுக்கின்றன.

இந்த பரப்பரப்பில் நாமும் மூழ்கிப்போனோம். அத்தோடு ஒரு அடிப்படையான ஒரு கேள்வியையும் நமக்குள் கேட்க மறந்துவிட்டோம். ' செய்தி ஊடகங்களோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்கவேண்டும்?' என்ற கேள்விதான் அது.

இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், எந்த இயந்திரம் எப்பொழுதும் நமது கண்களையும், காதுகளையும், சிந்தனைகளையும் ஆக்கிரமித்து இருக்கின்றதோ, அது நம்முடையது அல்ல. நாம் தயாரித்தது அல்ல.

நாம் அந்த இயந்திரத்தை வடிவமைக்கவும் இல்லை, அந்த இயந்திரத்தை ஓட்டவும்  இல்லை. அந்த இயந்திரம் நம்மோடு பேசுகிறது. நம்மைப்பற்றி பேசுகிறது. ஆனால் அதற்கென்று தனி செயல்திட்டம் உள்ளது.

இந்த செய்தி ஊடகங்கள் தங்களை அறிவுப்பூர்வமானவை என்று சொல்லிக்கொள்கின்றன. கண்ணியமானவை, நடுநிலையானவை என்று சொல்லிக்கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் இது ஒன்றையும் காணோம். பொறாமையும், விரோதமும், இருக்கக் காண்கிறோம். நடுநிலை தவறிய ஒரு சார்பு நிலை இருப்பதைக் காண்கிறோம்.

அவைகளுக்கு சாதகமான விஷயங்கள், பிடித்தமான விஷயங்கள் மடுபோல் இருந்தாலும் அதனை மலைப்போல் பெரிதாக்கிக் காட்டுகின்றன இந்த செய்தி ஊடகங்கள்.

அவைகளுக்கு சாதகமில்லாத விஷயங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அவைகளை அலட்சியம் செய்கின்றன. துரதிஷ்டவசமாக, இந்த ஒரு சார்பு மீடியாதான் நமது அறிவின் முக்கிய ஆதாராமாக விளங்குகிறது.

இது உலக அறிவு என்பதோடு மட்டும் நின்றிடவில்லை. நம்மைப் பற்றி நாம் அறிவதற்கும் இந்த மீடியாக்களை நாடித்தான் ஓடிப்போக வேண்டியிருக்கிறது.

மேற்சொன்னவையெல்லாம் நமக்கு - இந்த உம்மத்திற்கு எதை உணர்த்துகின்றன? நாம் நமது செய்தி ஊடகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அந்த செய்தி ஊடகம், இப்பொழுதிருக்கும் அழுக்கு நிறைந்த, அழுகி போயிருக்கும் செய்தி ஊடகத்தின் குறைப்பாடுகள் அற்றதாய் இருக்கும்.

தனது சொந்த கண்கள், காதுகள் , சிந்தனையோடு இந்த இஸ்லாமிய மீடியா இருக்கும். அது அழகிய செய்திகளை அள்ளித்தரும். யாருடைய தூண்டுதலுடனும் அது செயல்படாது. ஒருபக்க சார்பு என்ற பேச்சே அங்கு இல்லை. இன்றைய மீடியாவைப்போல் பொய்களை மூலதனமாக வைத்து அது செயல்படாது. எப்போதும் உண்மை செய்திகளையே அது உலகுக்கு அளிக்கும்.

இது ஏற்படும் வரைக்கும், நம்மவர்கள் இப்பொழுதிருக்கும் மீடியாவையே சார்ந்து வாழவேண்டி இருக்கும். நாம் இந்த  மீடியாவை நமது வாசற்படிக்குள் வராமல் தடுக்க முடியாது. அதே போல் இந்த மீடியா இல்லாமல் நமது அன்றாட அலுவல்களைக் கொண்டு செல்ல முடியாது.

இஸ்லாமிய மீடியாவை உருவாக்கும் வரைக்குமுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் மிகவும் புத்திக்கூர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .
இந்த மீடியாவை அதுவரைக்கும் நமக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்ற அறிவை நாம் பெற்றிடுக்க வேண்டும்.

இஸ்லாம் இங்கும் நமக்கு அழகிய வழிக்காட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அது வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழி காட்டும் ஒரு மார்க்கமல்லவா... நாம் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை உறுதியோடு பின்பற்றலாம்.  இது சம்மந்தமாக மூன்று முக்கிய பாடங்களை திருக்குர் ஆன் நமக்கு கற்றுத் தருகின்றது. அவைகளாவன:

1. நீங்கள் பதிலளிக்கும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்:

விசுவாசிகளே, தீயவன் எவனும் உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உண்மைத்தன்மையை அறியும்பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்துக்கொள்ளுங்கள். (இன்றேல், அவனுடைய சொல்லை நம்பிய உங்கள்) அறியாமையால் யாதொரு ஜனங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படுபடியும் நேர்ந்துவிடும்  (அல்குர் -ஆன்  49:6).


இந்த குர்ஆன்  வசனம் நம்பகமில்லாத புறத்திலிருந்து வரும் தகவல்களையும், உன்மைதானா  என்று ஆய்ந்து அறிந்திடாத செய்திகளையும் நம்பி நமது நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது, பதிலளிக்க கூடாது என்று நம்ம எச்சரிக்கை செய்கின்றது.

' பெருமை மிக்க சர்வதேச செய்தி நிறுவனங்களெல்லாம்' என்னவாயிற்று? அவர்கள் தரும் செய்திகள் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டுமா? இல்லை. உண்மையில் அப்படி இல்லை. அவைகள் தரும் செய்திகளைப் பகுத்தறியும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும். தீய நோக்கத்துடன், தீய விளைவுகள ஏற்படுத்தும் எண்ணத்துடன் பரப்பப்படும் செய்திகளை நாம் இனம் கண்டுக்கொள்ள வேண்டும்.

இந்த 'பெருமைமிகு' செய்தி நிறுவங்கள் தாங்கள் உணமையான செய்திகளையே தருவதாக பீற்றிக் கொள்கின்றன. ஆனால் அவைகள் செய்திகள் என்றில்லாமல் தவறான பிரச்சாரத்தையே செய்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொய்யை இந்த செய்தி நிறுவனங்கள் அவிழ்த்துவிடுகின்றன.

முஸ்லிம் உலகம் இந்த பொய் செய்திகளை அப்படியே வாங்கி காதில் போட்டுக்கொள்கின்றன. பின்னர் அந்த பொய்செய்திகளை அடிப்படையாக வைத்து, அந்த செய்திகளெல்லாம் உண்மை என்று நம்பி அதற்கு பதிலளித்துக்கொண்டிருக்கின்றன. இது தவறு. செய்தி உண்மையா பொய்யா என்று ஆராயாமல், அதனை உண்மை என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.

2.உங்கள் பொறுப்பை நினைவு கூறுங்கள்:

திருக்குர்ஆன் கூறுகிறது:

நபியே நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்பற்றாதீர். ஏனெனில் நிச்சயமாக காது கண் இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே ( அதனதன் செயல்களைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். ( அல் குர்ஆன் 17:36) .

மௌலானா  ஷப்பீர் அகமது உஸ்மானி  அவர்கள் தங்கள் விரிவுரையில் இவாறு குறிப்பிடுகிறார்கள்:

'ஒரு விஷயத்தில் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராயாமல்,  அதனைப்பற்றி  எதுவும் சொல்லாதீர்கள். அல்லது அதன்படி நடக்காதீர்கள். இதில் செய்திகளை ஆராயாமல் ஒருவர் மீது பொய்சாட்சி சொல்லுதல், பொய்குற்றச்சாட்டுகளில் ஈடுப்படுதல் வெறுப்புணர்வையும், பகைமையையும் ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.'

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் ஆபாசத்தை காணாமல் தவிர்த்திருத்தல். இன்றைய நவீன மீடியாவில் ஆபாசக்காட்சிகள் என்பது பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டது.

3. பொய் பிரச்சாரத்தை புறம் தள்ளுங்கள்.

இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்கெதிரான பிரச்சாரத்தைத் தாக்குதலாக தொடுக்கும்பொழுது நம்மில் நிறைய பேருக்கு எவ்வித உணர்வும் ஏற்படுவதில்லை, எருமை மாடு மீது மழை பெய்த மாதிரி.

இந்த பொய் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது நமது கடமை. அத்தோடு சரியான பிம்பத்தை அவர்களுக்கு காட்ட வேண்டியதும் நமது கடமை. ஆனால் இந்த பொய் பிரச்சாரங்களை கண்டு நாம் பீதி அடையத் தேவையில்லை.  நாம் இந்தப் பொய் பிரச்சாரங்களால் கட்டாயபடுத்தப்பட கூடாது. அது எவ்வளவு கொடூரமான செய்தியாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வை இறை நம்பிக்கையாளர்கள் நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் தளராமல் முயற்சி செய்வார்கள். இந்த பொய் பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்யும். இது நமக்கொரு சோதனை.

(விசுவாசிகளே) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் (  நஷ்டமிழைக்கபடுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அன்றி , உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைப்பவர்களாலும் அநேக வசை மொழிகளையும் நிச்சயமாக நீங்கள் கேள்விப்படுவீர்கள். ( இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் ( பொறுமையுடன்) சகித்துக்கொண்டிருந்து,  பரிசுத்தவான்களாக நடந்து வந்தால் , ( நீங்கள் சித்தியடைவீர்கள்) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும் (அல் குர்ஆன் 3:186)

இந்த சோதனைகளை வென்று சாதனைகளாக்கி, இஸ்லாமிய மீடியாவை உருவாக்குவோமாக. 

     ....................................................................................................ஃ காலித் பெய்க் 

  நன்றி : IMPACT INTERNATIONAL, JULY 2001 .

தமிழில் : MSAH



No comments:

Post a Comment