test

Friday, December 14, 2012

ஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!

திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா?

அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்பதனால் மட்டுமல்ல.

அது அருளப்பட்ட முறையிலும் அமைக்கப்பட்ட வடிவிலும் மொழியின் அழகிலும் நடையின் நயத்திலும் விந்தனையானது மட்டுமல்ல.


அது வாழும் தலைமுறைகள் எல்லாம் தீமைகளுக்கு எதிராகவும் அநீதிகளுக்கு எதிராகவும் அடிமைபடுத்தி ஆட்சி செய்ய வரும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் கொதித்தெழுந்து போராடும் ஒரு இலட்சியத் திருக்கூட்டத்தை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும்.

இந்த புனிதப் போரில் களங்காணும் மழவர்கள் எதிர்ப்புகளை அவை எத்துனை வலுவோடு வந்தாலும் எந்த சலனமும் எள்ளளவும் இன்றிச் சந்திப்பார்கள்.

இதில் தூக்குமேடைகள் அவர்கள் சொர்கத்தை நோக்கி எடுத்துவைக்கும் அடிகளின் படிக்கட்டுகள்.

இந்த இலட்சிய செம்மல்கள் ஊட்டம்  பெறுவதும், உணர்வு பெறுவதும் அல்லாஹ்வின் சொற்களால் அலங்கரிக்கப்பெற்ற அல்குர்ஆனிலிருந்துதான்.இப்படி கொள்கை மறவர்களை உருவாக்கிடும் அற்புத ஆற்றல் பெற்றதால்தான் அல்குர்ஆன்   ஓர் வாழும் அற்புதம்.

முத்துபல் வரிசையைப்போல் பளிச்சிடும் இந்தப்படை வரிசையில் பட்டை தீட்டிடப்பட்ட வைரமாய் மிளிர்பவரே அல்லாஹ்வின் வழியில் தன உயிரைத் தந்த பேரறிஞர் ஷஹீத் செய்யித் குத்துப்(ரஹ்) அவர்கள். 

இந்த செய்யித் குதுப் அவர்களை, இரண்டாம் முறையாக கைது செய்திட வந்தபோது அவர்களின் உடல் நலம் முற்றாக சீர்கெட்டிருந்தது.

எனினும் அவர்களை சங்கிலியால் பிணைத்து இழுத்துசென்றார்கள்.

செய்யித் குதுப் அவர்களோடு இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்படியே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எழுதிய நூல்களை தங்கள்  இல்லங்களில் வைத்திருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

அன்புள்ள சகோதரனுக்கு என்று கடிதங்களில் எழுதியவர்களும் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை சேர்ந்தவர்களே எனக் கணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

இந்த கைதுகளை செய்து காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துகொண்டிருந்த எகிப்தின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதை இலட்சியமாக கொண்டோரை எப்படியேனும் அழித்துவிட வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயலில் குதித்தனர்.

இதனை எகிப்தின் அதிபராய் அமர்ந்து ஆட்சி செய்துக்கொண்டிருந்த ஜமால் அப்துல் நாசர் 1965 இல் தனது ரஷ்ய பயணத்தின்போது தெளிவுபடுத்தினார்.

மாஸ்கோவில் ஆற்றிய உரை ஒன்றில் அப்துல் நாசர் இப்படிக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னாள் இவர்களை விட்டுவிட்டதைப்போல் இப்போது இவர்களை விட்டுவிடப்போவதில்லை. இவர்களை வேரோடு வீழ்த்திடப்போகின்றேன்.

தனது மாஸ்கோ முதலாளிகளுக்கு இப்படி வாக்களித்த நாசர் தான் விசுவாசித்து வாழ்ந்துவரும் வாஷிங்டன் எஜமானர்களுக்கும் இப்படியே உறுதி தந்தார்.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை சார்ந்தவர்களை அழிப்பதன் மூலம் தனது எஜமானர்களுக்கும் முதலாளிக்களுக்கும் தான் நம்பிக்கைக்குரிய ஏவலாள்தான் என்பதை உறுதிப்படுத்திட விழைந்தார் நாசர்.

இந்த உண்மை அவரது மாஸ்கோ பிரகடனத்தின்போது வெளியே வந்தது.

இதனால்தான் செய்யித் குதுப் அவர்களுக்காக வாதாட வந்த உள்நாட்டு வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

யாருமறியாமல் நடத்தப்பட்ட இந்த இரகசிய விசாரணையில் செய்யித் குதுப் அவர்கள் மீது பல குருட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இராணுவ நடுவர் மன்றம் ஒன்றே இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தித் தீர்ப்பு வழங்கிற்று.

ஓரிரு கேள்விகளுக்கு பதில் சொல்லிடுவதைத் தவிர சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுக்கவோ ஏற்கவோ செய்யித் குதுப் அவர்களுக்கு வாய்புகள் வழங்கப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டுக்கள் இராணுவ படை சஞ்சிகை புத்தகம் எண் 446.18.101965.இல் வெளியானது.

இந்த குற்றச்சாட்டுக்களின் சுருக்கம் இதோ,

குற்றச்சாட்டுகள் 

1.செய்யித் குதுப் இந்த எகிப்து நாட்டிற்கு தன் சொந்த நாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். இந்த வகையில் தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்தார்,

2.செய்யித் குதுப் எகிப்தின் ஆட்சியாளர்கள் ஆட்சியோடு தொடர்புடையவர்கள்   அதிகாரிகள் அனைவரையும் கொலை செய்திட திட்டங்களைத் தீட்டினார். இந்த திட்டங்கள் நிறைவேறியிருந்தால் எகிப்து எல்லா தலைவர்களையும் இழந்து கையறு நிலைக்கு உள்ளாயிருக்கும்.

3.எகிப்தின் கீர்த்தியை உலகில் உயர்த்திடும் நடிகர்களையும் நடிகைகளையும் கொன்று போட்டிட திட்டங்களைத் தீட்டினார்.

4.மைல்கற்கள் என்னும் தனது நூலில் இந்த உலகில் இருக்கும் எந்த கொள்கையும் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பற்றிடாது, இஸ்லாம் மட்டுமே மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றிடும் வன்மை பெற்றது என சாதிக்கின்றார்.

5.செய்யித் குதுப் மைல்கற்கள் என்னும் நூலில் எகிப்திலிருக்கும்  ஆட்சியும் அந்த ஆட்சியை இயக்கிகொண்டிருப்போரும் ஜாஹிலியா என்ற மௌட்டிகத்தில் இருப்பதாக நிரூபிக்கின்றார்.

இது யாருடைய அதிகாரத்திற்கு இவர் கீழ்படுந்திட வேண்டுமோ அவர்களுக்கெதிரான போர் பிரகடனமாகும்.

6.மைல்கற்கள் என்ற நூலில் செய்யித் குதுப் அவர்கள் எடுத்து வைக்கும் நிரூபணங்களில்  அடிப்படையில் எகிப்திலிருக்கும் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை செயல்படுத்தவில்லை.இவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியை அபகரித்துகொண்டவர்கள். இவர்கள் எகிப்தின் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்கள்.

இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச்செய்யும் பயங்கர போர் முழக்கமாகும்.

7.மைல்கற்கள் என்ற நூலில் செய்யித் குதுப் அவர்கள் எகிப்தின் இன்றைய ஆட்சியாளர்களின் கையிலிருந்தும் ஆட்சியை மீட்டேயாகவேண்டும் எனப்பிரகடனப்படுத்துகின்றார். இதற்கு பலத்தை பிரயோகிப்பது விரும்பத்தக்கது என்பது மட்டுமல்ல கடமையுமாகும் என விவாதிக்கின்றார். திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரத்திற்கு இழுத்திருக்கின்றார். இது ஆயுதம் தாங்கியதோர் புரட்சியை ஆட்சியாளர்களுக்கு எதிராக தூண்டிவிடும் மன்னிக்கவியலாத குற்றமாகும்.

8.மைல்கற்கள் என்னும் நூலில் ஆசிரியரான இவர் , இறைவன் தன திரு தூதர்(ஸல்) அவர்களிடம் யாரெல்லாம் போரிட வருகின்றார்கள் அவர்களோடு போராடிட வேண்டும் என்றும் யாரெல்லாம் போராட விரும்பவில்லையோ அவர்களை விட்டுவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டதாக கூறுகின்றார், இத்தோடு இஸ்லாம் தற்காப்புக்காகத்தான் போர் புரிவதை கடமையாக்கியது என்றில்லை என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வழியில் போர் . மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை பூமியிலிருந்து முற்றாக அகற்றப்பட்டு அல்லாஹ்வின் ஆட்சி நிலை நாட்டப்படும் வரை தொடர்ந்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.எப்போதும் இஸ்லாம் என்ற பேரியக்கத்தின் பாங்கும் போக்கும் இப்படித்தான் இருந்தது என்கிறார்.

9.அதேபோல் இஸ்லாம் மேலோங்கியபின்னால் இஸ்லாத்தை விட்டு வெளியேறிடும் கிளர்ச்சியை யாரும் செய்திட இயலாது என்று கூறியுள்ளார்.

10. இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் ஏற்படும் அத்தனை தடைகளையும் அவசியமானால் பலத்தை பயன்படுத்தி அகற்றிடவேண்டும். இதை திருக்குர்ஆன் வசங்களை கொண்டே நிரூபித்திருக்கின்றார்.

11. செய்யித் குதுப் அவர்கள் தனது நூலின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரம் பலம் அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்டுதல் தடைகளை அகற்றுதல் என்ற சொற்களை தாராளமாக் பயன்படுத்தி இருக்கன்றார்.

இவை புரட்சிகளை தூண்டும் சொற்களாகும்.

அல் காதிப் என்ற கம்யூனிச பத்திரிகை தரும் தகவல்களின் அடிப்படையில் விசாரணையின்போது அந்த இராணுவ நடுவர் மன்றத்தின் தலைவர் செய்யித் குதுப் அவர்களிடம் நீங்கள் மௌலானா மௌதூதி அவர்களின் எழுத்துக்களை காப்பி அடிக்கவில்லைய? எனக்கேட்டார்.

அதற்கு செய்யித் குதுப் அவர்கள் மௌலானா மௌதூதி அவர்களின் நூல்களிலிருந்து நான் பயனடைந்து இருக்கின்றேன் என்று பதில் சொன்னார்கள். மீண்டும் அந்த நடுவர்,

மௌலானா மௌதூதி அவர்களின் கருத்துக்களுக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் என்ன வேறுப்பாடு? எனக்கேட்டார். இதற்கு செய்யித் குதுப் அவர்கள் எந்த வேறுப்படும் இல்லை எனக்கூறினார்கள்.

இப்படி செய்யித் குதுப் அவர்கள் கூறியதை வைத்துக்கொண்டு இந்த கம்யூனிஸ்ட் பத்திரிக்கையும் இன்னும் பல பத்திரிக்கைகளும் செய்யித் குதுப் அவர்கள் மௌலானா மௌதூதி எழுத்துக்களை கருத்துக்களை அப்படியே பயன்படுத்திவிட்டார்கள் எனக் குறை கூறின.

உண்மை என்னவெனில் திருக்குர்ஆன், நபிமொழி, நபிவாழ்வு ஆகியவற்றை நிறைவாக புரிந்து கொண்டு வாழ்பவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஒன்று போலவே இருக்கின்றன.

அதனால்தான் அவர்களின் எழுத்தும் ஒன்றுபோலவே அமைந்துவிடுகின்றன. அவ்வளவுதான்.

செய்யித் குதுப் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறியே அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

இறைவனிடமே இருதித்தீர்ப்பும்  தீர்வுமிருக்கின்றது.

அல்லாஹ் போதுமானவன். 

நன்றி: இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் (திண்ணைத் தோழர்கள் பதிப்பகம்)

1 comment:

faizeejamali said...

Fantastic article I have no words to comment please keep updating like this.

Post a Comment