test

Friday, November 16, 2012

முஹர்ரம் - கடைப்பிடிக்க வேண்டியதும் தவிர்க்கப்பட வேண்டியதும்

 முஹர்ரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் . அல்லாஹ் புனிதமாக்கிய நான்கு மாதங்களில் ஒன்று இம்மாதம்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டாகும் . அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும்.ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்து கொள்ளாதீர்கள் .
                                                                                                                       அல் குர்ஆன் : 9:36


துல்கஅதா , துல்ஹஜ் , முஹர்ரம் , ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் புனிதமிக்க மாதங்களாகும் .

ஆண்டின் பனிரெண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும் . இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச்சிறந்தது முஹர்ரம் மாதமாகும்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நான் நபி(ஸல்) அவர்களிடம் இரவின் எந்தப்பகுதி சிறந்தது ? இன்னும் மாதங்களில் எது சிறந்தது?" எனக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரவில் சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச்சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கின்ற அல்லாஹ்வின் மாதமாகும்.(நசாயி:4612)


முஹர்ரம் அல்லாஹ்வுடைய மாதம் என்று சொல்லப்பட்டதிலிருந்து அது எத்துனை சிறப்புமிக்க மாதம் என்பதை அறியலாம்.

ஆஷூரா 

முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளை முக்கியப்படுத்தி அந்நாளில் நோன்பு நோற்பதை மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது .

"ஆஷூரா" என்ற சொல்லுக்கு "பத்தாவது" என்பது பொருளாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி)  அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது யூதர்கள் ஆஷூரா அன்று மோன்பு நோற்றிருந்ததை கண்டார்கள். அவர்களிடம் "நீங்கள் நோன்பு இருக்கின்ற இந்த நாள் என்ன(நாள்)?' என்று கேட்டார்கள்.    அதற்கு யூதர்கள் பதில் கூறினர்: "இது ஒரு மகத்தான நாள் . இதில் அல்லாஹ் நபி மூஸா(அலை) மற்றும் அவருடைய மக்களையும் அல்லாஹ் பாதுகாத்தான்.  பிர்அவ்னையும் அவன் கூட்டத்தையும் மூழ்கடித்தான். எனவே அதற்கு நன்றி செலுத்துவதற்காக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் . எனவே நாங்களும் நோன்பு நோற்கிறோம்." உடன் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : " உங்களைவிட நபி மூஸா(அலை) அவர்களுக்கு நாங்களே மிக நெருக்கமானவர்கள்(உரிமையுள்ளவர்கள்)".
 பிறகு நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள் பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள்.(முஸ்லிம்:2714)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : "நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளைத்தவிர வேறு நாளை நோன்பு நோற்பதற்காக சிறப்பித்து தேடியதில்லை. அப்படியே ரமலான் மாதத்தை தவிர வேறு மாதத்தை தேடியதில்லை(புகாரி:1902)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நான் நோன்பு நோற்பேன்".

மேற்கண்ட ஹதீசிலிருந்து யூதர்களுக்கு மாறு செய்யும்பொருட்டு முஹர்ரம் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பது மிகச்சிறந்த வணக்கமாகும் .

ஆஷூரா நோன்பை நோற்பவருக்கு  இன்னொரு மிகச்சிறந்த பலனும் கிடைக்கிறது .

அது

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆஷூரா நோன்பு அது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கருதுகிறேன்"

மேற்குறிப்பிட்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்ட பாவங்கள் சிறு பாவங்களாகும். பெரும்பாவங்கள் தவ்பா(பாவ மன்னிப்பு) கேட்பதைக்கொண்டுதான் மன்னிக்கப்படுகின்றன .

முஹர்ரம் மாதத்தில் அரங்கேறும் அனாசாரங்கள்  

இவ்வளவு நன்மையை பெற்றுத்தரும் சிறப்புமிக்க அல்லாஹ்வின் மாதமான ஆஷூரா தினத்தை சில அறிவிலிகள் துக்கநாளாக கடைப்பிடிப்பது  மார்கத்திற்கு முரணான செயலாகும்.

ஹூசைன்(ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதை  நினைவு கூறும் விதமாக ஆஷூரா நாளை துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். அந்நாளில் தீமிதிப்பது , சாட்டையால் தங்களை ரணகலப்படுத்துவது , போன்ற செயல்களை செய்கின்றனர். இப்படி செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த ஒரு ஆதாரமோ அனுமதியோ இல்லை . மாறாக இது மாற்று மத சடங்குகளுக்கு ஒப்பானவை. இது பெரும் குற்ற செயலாகவே மார்க்கத்தில் கருதப்படும் .

"துக்க நாள்" கடைப்பிடிப்பதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை . ஏன் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள்களும் கொண்டாட இஸ்லாத்தில் அனுமதி இல்லை . ஏனெனில் அது மாற்று மத கலாச்சாரங்கலாகும் . முஸ்லிம்கள் மாற்றுமத கலாச்சாரங்களை பின்பற்றுவது முற்றிலும் தடை செயப்பட்டதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் பிற மத மக்களைப் போன்று செயல்படுகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே"(அபூ தாவூது:3512)

"இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை கடைப்பிடிக்கக்கூடாது என நபி(ஸல்)) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருக்கிறோம் . ஆனால் கணவன் இறந்துவிட்டால் மனைவி மட்டும் நான்கு மாதம் பத்து நாள் துக்கம் அனுசரிப்பாள் ,"(புகாரி:313)

சோதனைகளின்போதும்   துக்கத்தின்போதும் கன்னத்தில் அறைந்து கொள்பவனும் சட்டைகளை கிழித்துகொள்பவனும்  மூடத்தனமான வார்த்தைகளை பேசுபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி:1294)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் புதிதாக சடங்குகளை உருவாக்குவாரோ அந்த சடங்குகள் மறுக்கப்படவேண்டியவையே.(புகாரி:2499)

எந்த அளவுக்கு என்றால் பத்தாம் நாள்நோன்பைக்கூட  யூத, கிருஸ்தவர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் நபியவர்கள் 9,10 என்று இருநாட்கள் நோற்கும்படி வலியுறுத்தி இருக்கும்போது பிரமத கலாச்சாரங்களை அப்படியே முஸ்லிம்கள் செய்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது.


நபி(ஸல்)  அவர்கள கூறினார்கள் : ,"உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். அவற்றை பற்றிபிடிக்கும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள் .

அது

1. அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன் )
2. நபி(ஸல்) அவர்களின் வழிமுறை(ஹதீஸ்)
(ஹாகீம்)



No comments:

Post a Comment