test

Friday, January 27, 2012

ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் வாழ்கை குறிப்பு

( திண்ணை தோழர் பதிப்பகத்தாரின் வெளியீடான "திருக்குர் ஆனின் நிழலில்" இருந்து ...) 


புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகியது 

உலகில் பலரை சாதனையாளராக தோற்றுவிக்கின்றான் . இன்னும் சிலரை சரித்திரத்தில் இடம் பெற செய்கின்றான் . இன்னும் சிலரையோ சரித்திரமாகவே ஆக்கிவிடுகின்றான் . இப்படி இறைவனின் அருளாசியோடு இருபதாம் நூற்றாண்டில் வரலாறு படைத்த மாமேதைகளின் வரிசையில் தன்நிகரற்றதொரு தனி இடத்தை பெற்றுவிட்டவர்தான் ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் .

கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியுடன் நின்று , சத்திய நெறியை இவ்வுலகில் நிலை நாட்டுவதையே இலட்சியமாக கொண்டு , அதற்கென தன் வாழ்வை முற்றாக அர்பணித்து ,இறுதியில் தன் இன்னுயிரையும் ஈந்திட்டதால் வரலாறு அவரை சிவீகாரம் செய்திட்டது .

எகிப்து நாட்டின் அஸ்ஸியூத் மாகானத்திற்குட்பட்ட மோஷா எனும் கிராமத்தில் மார்க்க பற்று மிக்க விவசாய குடும்பமொன்றில் இப்ராகிம் குதுப் பாத்திமா ஹுஸைன் உஸ்மான் தம்பதியரின் தலைமகனாக 1906 ஆம் ஆண்டு செய்யித் குதுப் பிறந்தார் . உடன் பிறந்தவர்களில் முஹம்மது குதுப் சகோதரர் . ஹமீதா குதுப் , ஆமீனா குதுப் உட்பட மூன்று சகோதரிகள் . இவர்களும் சிறந்த எழுத்தாளர்களும் சீரிய இஸ்லாமிய சேவகர்களும் ஆவர் .

இறை நெறியாம் இஸ்லாத்தை மேலோங்க செய்வதையே இலட்சியமாக கொண்டு செயல்பட்டதால் சொல்லனா துன்ப துயரங்களுக்கு இலக்கானது குதுப் குடும்பம் . இறுதி தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய அழைப்பு பனியின் ஆரம்ப கட்டத்தில் யாசிர் (ரலி) அவர்களின் குடும்பம் எப்படி ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்ததோ , அது போன்றதொரு எடுத்துக்காட்டுமிக்க , வீரத்திலும் தியாகத்திலும் விஞ்சி நின்றதொரு வரலாற்றை தான் குதுப் குடும்பம் இந்த நவீன கால இஸ்லாமிய உலகிற்கு வழங்கயுள்ளது .

பாலர் பருவத்திலேயே திருமறை குர் ஆனை மனனம் செய்துவிட்ட செய்யத் குத்துப் தமது 23 வது வயதில் தாருத் உலூம் -இல் (இன்றைய கெய்ரோ பல்கலை கழகம் ) சேர்ந்து 1933 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிபெற்றார் , 

அறிவிலும் ஆற்றலிலும் மிகைத்திருந்த காரணத்தால்  செய்யித் குதுப், தாருல் உலூமிலேயே ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டார் . இலக்கியத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த குத்துப் அவர்களை , அப்பாஸ் மஹ்மூத் அகாத்-இன் ஆக்கங்கள் வெகுவாக கவர்ந்தன . 

அப்பாஸ் மஹ்மூத் அகாதும்,முஸ்தபா சாதிக் குர்சாபியும் எகிப்திய இலக்கிய உலகில் இருதுருவர்களாய் நின்று மோதிகொண்டிருந்த காலம் அது .

திருக்குரானின் கலை இலக்கிய நயங்களின் கதிரொளியில் தமது இலக்கியப் படைப்புகளை வழங்கி கொண்டிருந்த சாதிகுர்ராபி அவர்களுக்கு ஆதரவாக செய்யத் உர்யான் என்பவர் களமிறங்கியதும் , இவருக்கு எதிராக மஹ்மூத் அகாதின் அணியில் நின்று போராட செய்யித் குதுப் களம் புகுந்தார் .

இறுதியில் ராபியின் குர் ஆனிய இலக்கியம் எனும் உறுதியான ஆயுதத்தை உயர்த்தி பிடித்திருந்த உர்யானிடம் சரனைந்திடும் கட்டாயம் செய்யித் குதுபிற்கு நேர்ந்தது . இந்த தூரிகை போராட்டத்தில் குதுப் தோல்வியை தழுவ நேர்ந்த போதினும் திருக்குர் ஆனின் உள்ளார்ந்த இலக்குகளை உணர்ந்து கொள்வதற்கும், தன் பேனா முனையின்  சலனம் புதியதொரு திருப்புமுனையை காண்பதற்கு அது உதவியது . இதன் பயனாக வெறும் இலக்கிய சுவைக்காக மட்டுமே குர் ஆனை அனுகிகொன்டிருந்தவர் , அதன் இலட்சியங்களை நிலை நாட்டுவதற்கு தன்னை முற்றாக அற்பனித்திடும் பக்குவம் பெற்றார் .

இதற்கிடைய எகிப்திய அரசின் கல்வி அமைச்சகம் செய்யித் குதுபை இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் ஆக நியமித்தது .எகிப்தின் மிகவும் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் உரிய பதவியாகும் . இதை தொடர்ந்து நவீன கல்வி முறைகளை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அரசு அவரை அமெரிக்கா அனுப்பி வைத்தது . 1948 முதல் 51 ஆம் ஆண்டு வரை அவர் வாஷிங்க்டன் ' வின்சன் டீச்சர்ஸ் காலேஜ் ' , கிரேலி கொளராடோ ' டீச்சர்ஸ் காலேஜ் ' கலிபோர்னியா ' ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி ' போன்ற ஸ்தாபனங்களில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டார் . நியூயார்க் ,சிகாகோ ,சான்பிரான்சிஸ்கோ , லாஸ் ஏஞ்சல் போன்ற பேரு நகரங்களுக்கும் இங்கிலாந்து ,இத்தாலில் சுவிட்சலாந்து போன்ற நாடுகளுக்கும் இதனிடையே அவர் சென்று வந்தார் .

தமது மேலை நாட்டு சுற்றுபயனத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்பியதும் , அங்கு தான் கண்டவற்றையும் , கற்றவற்றையும் விளக்கி விவரித்து " நான் கண்ட அமெரிக்கா " என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதினார். முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றி  வருவதால் விளையபோகும்  பேராபத்தை பற்றியும் , முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு எதிராகவும் , இஸ்லாமிய சமூகத்தின் தனித்தன்மைகளை அழிப்பதற்காகவும் மேற்கத்திய சக்திகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுகின்றன என்பது பற்றியும் , இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் ஒழுக்க பண்பாடுகளை பேணிக்காத்திட வேண்டியதன அவசியம் பற்றியும் " நான் கண்ட அமெரிக்கா"வில் செய்யித் குதுப் விளக்கியிருந்தார் . எகிப்திய  கல்வி முறையை இஸ்லாமிய மயமாக்குவதற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் அதில் இடம் பெற்றிருந்தன .

செய்யித் குதுபின் அமெரிக்க பயணம் அவரை முற்றிலுமாக ஒரு மேற்கத்திய தாசனாக ஆக்கிவிடும் .என்று எதிர்பார்த்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள் . கல்வித்துறையில் சீர் திருத்தம் பற்றி கருத்து கூற அரசு அவருக்கு தடை விதித்தது .  ஆனால் அரசாங்க கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒதுங்கி வாழ்ந்திட தக்கதாய் இருக்கவில்லை - அவர்களின் வேட்கை . எனவே அரசு தந்த உயர் பதவியை 1951 ஆம் ஆண்டின் இறுதியில் இராஜினாமா செய்துவிட்டார் .

எகிப்திய சமூகத்ததை இஸ்லாமிய அச்சில் வார்தெடுப்பதற்கான செயல் திட்டமொன்றை வகுத்திருந்த செய்யித் குதுப் , இந்த பணிகளை தனியாக தொடங்குவதை விட தமக்கு முன்னரே இத்தகைய இலட்சிய பணிகளை துவங்கி நடத்தி கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயல்பட்டால் விரைந்து பயன் விளையுமே என்று எண்ணி 1952 ஆம் ஆண்டு தம்மை இஹ்வானுல் முஸ்லிமூன் - இல் இணைத்துக்கொண்டார் .

செய்யித் குதுப் இஹ்வானில் தம்மை இணைத்திடும்போது, அந்த இயக்கம் சோதனை தொடர்களின் முதல் கட்டத்தை தாண்டியிருந்தது . 1945 ஆம் ஆண்டிலிருந்து இயக்கம் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது . 1949 இல் அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதம் இஹ்வானின் ஸ்தாபக தலைவர் 'இமாம் ஹசனுள் பன்னா' அவர்களை பலிகொண்டது . பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்ட இடத்தில் வைத்து இமாம் ஹசனுல் பன்னா அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் . தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு வரை அரசின் கடுமையான அரசின் அடக்குமுறைகளுக்கு இஹ்வான்கள் இலக்காயினர் .

இந்த ஆண்டில் எகிப்தில் நிலைகொண்டிருந்த பாரூக் ராஜாவின் மன்னராட்சி இராணுவ புரட்சியால் அப்புறப்படுத்தப்பட்டது . இதன் பயனாக இஹ்வான்களின்  மீது ஏவப்பட்டிருந்த அடக்குமுறை கொடுமைகள் முடிவுக்கு வந்தன . இஹ்வான்கள் மீண்டும் தங்களது செயல்பாட்டை ஹசனுல் ஹுதைபி அவர்களின் தலைமையில் துவங்கினர் .

இப்போது இயக்கத்தின் பொது செயலாளர் பொறுப்பை ஜஸ்டிஸ் அப்துல் காதிர் அவ்லா ஷஹீத் அவர்கள் வகித்திருந்தார்கள் . இயக்கத்தின் அழைப்பு மற்றும் பிரச்சாரக்குழுவின் தலைவராக , இஹ்வான்களை வழி நடத்தும் தலைமை பொறுப்பின் மூன்றாவது இடத்தில் இருந்தார் செய்யித் குதுப் அவர்கள் .

1954 ஜூலை மாதத்தில் இயக்கத்தின் ஏடான அல் இஹ்வானுல் முஸ்லிமூனின் பிரதம ஆசிரியர் பொறுப்பையும் குதுப் ஏற்றுக்கொண்டார் . ஏற்கனவே பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றிருந்த அவர் , தெளிந்த இஸ்லாமிய ஞானம் கைவந்து சேரும் முன்னர் " அல்பிக்குருல்ஜதீத்"என்றொரு பத்திரிக்கையை நடத்தி கொண்டிருந்தார் .இது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோசலிஷ சித்தாந்தத்தை தழுவிய "இஸ்லாமிய சோஷலிசத்திற்கு  குரல் கொடுத்து கொண்டிருந்தது . இதற்கு முன்னர் ' அழ ஆழமுள் அரபி ' என்ற பத்திரிக்கையிலும் , ஆசிரியராக பணிபுரிந்துள்ளார் . இந்த முன் அனுபவங்கள் " அல் இஹ்வானுல் முஸ்லிமூன் " ன் ஆசிரியருக்கு பெரிதும் தனை புரிந்தன . இருந்தும் இஹ்வான் பத்திரிகை இரண்டு மாதங்களுக்கு மேல் வெளிவரவில்லை .

காரணம் : 1954 ஜூலை 7 ஆம் நாள் , ஜமால் அப்துல் நாசர் தலைமையிலான எகிப்திய அரசும் , ஆங்கிலேயரும் செய்துகொண்ட ' ஆங்கிலோ எகிப்திய உடன்பாட்டை ' பத்திரிகை கடுமையாக விமர்சித்திருந்ததால் அரசாங்கம் அதை பறிமுதல் செய்து , தொடர்ந்து பத்திரிகை வெளியிடவும் தடையும் விதித்தது .இத்துடன் இஹ்வான்களின் அடுத்தக்கட்ட சோதனை காலம் ஆரம்பமாயிற்று .

அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது .தலைவர்கள் கழுவேற்றப்பட்டனர் . செய்யித் குதுப் உட்பட பல்லாயிரம் இஹ்வான்கள் சிறைஎடுக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்டவர்கள் சொல்லொண்ணா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த செய்யித் குதுப் அவர்களை இல்லத்திலிருந்து கைது செய்து,சங்கிலிகளால் பிணைத்து சிறைச்சாலை வரை இழுத்துச் சென்றனர் செல்லும் வழியில் பல முறை மயக்கமுற்று விழுந்திருக்கின்றார் . மீண்டும் நினைவு திரும்பியதும் அவரது உதடுகள் அல்லாஹூ அக்பர் வலில்லாஹில் ஹம்து என்றே உச்சரித்தன .இதுவே இஹ்வான்களின் பிரதானமான முழக்கமாகும் . சிறைச்சாலையை நெருங்கியதும் குதுபின் வருகைக்காக காத்திருந்த கயவர்கள் அவரை ஒரு நோயாளி என்றும் பாராமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வன்மையாக அடித்து துன்புறுத்தி விட்டு , பயிற்றுவிக்கப்பட்ட  நாய் ஒன்றை அவர்மீது ஏவிவிட்டனர் . அது துடையை கவ்வி பிடித்து செய்யித் குதுப் அவர்களை இழுத்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடி ஓய்ந்தது . நோயின் கடுமையினாலும் , சித்திரைவதைகளாலும் கடுமையாக பதிக்கப்பட்ட குதுப் அவர்களை தனி அறையில் வைத்து இரக்கமற்ற முறையில் ஏழுமணி நேரத்திற்கும் கூடுதலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .

இரவு நேரங்களில் குறுகலான இருட்டறைகளில் பிணைத்திடுவதும்,பொழுது விடிந்தால் கடும் வெயிலிலும் சுடு மணலிலும் கிடத்தி சித்ரவதைகளை தொடர்வதும் நீடித்தன . நெருப்பு கங்குகளால் சூடு போடுவது , நாய்களை ஏவி விட்டு கடித்து குதற செய்வது , கொதிக்கும் நீரையும் நன்கு குளிர்ந்த நீரையும் மாற்றி மாற்றி தொடர்ந்து தலையில் ஊற்றுவது , உருட்டு கட்டைகளாலும்,பழுக்க வைத்த கம்பிகளாலும் அடிப்பது ,இப்படி பல்வேறு வகையான வன் தாக்குதல்கள் அவர்மீது தொடுக்கப்பட்டதால் அவரது உடல் கடும் நோய்களால் பீடிக்கப்பட்டு 1955 மே 3 ஆம் நாள் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .

1955 ஜூலை 13 ஆம் நாள் எகிப்திய நீதி மன்றம் செய்யித் குதுப் அவர்களுக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது . தண்டனை விதிக்கப்பட்டு ஓராண்டு கழிந்த பின்பு அதிபர் நாசரின் சிறப்பு தூதர் ஒருவர் செய்யித் குதுப் அவர்களை சிறையில் வந்து சந்தித்து , தாங்கள் ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி பிரசுரத்திற்காக தந்துவிட்டால் இந்த சிறையிலிருந்து விடுதலையாகி ,வீடு திரும்பி சுகமாய் இருக்கலாமே என்றார் .

இதற்கு அந்த வீரத்திருமகன் அளித்த உறுதியான பதில் அடக்குமுறையானிடத்தில் மன்னிப்பு கூறும்படி அடக்குமுறைக்குள்ளானவனுக்கு உபதேசிப்பவர் என்னை பொருத்தமட்டில் ஏளனத்திற்கு உரியவரே ! அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் மன்னிப்பு கோரும் ஒரு சில வார்த்தைகள் தூக்கு கயிற்றிலிருந்து என்னை காப்பாற்றும் என்ற நிலை வரினும் அதற்கு நான் முன் வரமாட்டேன் . என்னுடைய இரட்சகனை நானும் என்னை எனது இரட்சகனும் பொருந்தி கொண்ட நிலையிலேயே அவனது சந்நிதானத்தில் ஆஜராக நான் விரும்புகிறேன் .எனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை நீதமானதுதான் என்றால் நீதியின் தீர்ப்புக்கு கட்டுப்பட நான் கடமைப்பட்டுள்ளேன் . அநீதமாக நான் தண்டிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதர்மத்திடம் கருணை கோரி கையேந்த நான் தயாரில்லை .இதுகேட்டதும்  அந்த தூதுவர் வந்த வழியே திரும்ப சென்றுவிட்டார் .

தண்டனை விதிக்கப்பட்ட முதல் மூன்றாண்டுகள் சித்ரவதைகளின் கொடுமை கடினமாக இருந்தது . பின்னர் நாளுக்கு நாள் கடினம் குறைந்து கொண்டிருந்தது . உற்றார் உறவினர் வந்து காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி "ஃபீழிலாலில் குர் ஆனை" முழுமை படுத்தும் முயற்சியில் மூழ்கினார் . இதன் ஒரு சில பகுதிகள் கைதாவதற்கு முன்னரே எழுதி முடிக்கப்பட்டிருந்தன .

1964 ஆம் ஆண்டு கெய்ரோ விஜயம் செய்த இராக்கின் அதிபர் அப்துஸ்ஸலாம் ஆரீப் அவர்கள் ,தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்யித் குதுப் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமாய் அதிபர் நாசரிடம் விண்ணப்பித்து கொண்டார் . அப்துஸ்ஸலாம் ஆரிபுடன் உறவை வலுப்படுத்த நாடியிருந்த நாசர் , 15 வருட தண்டனை பெற்றவர்களின் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக தளர்த்திடும்  மரபின் கீழ் செய்யித் குதுப் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார் . எனினும் இது பூரண விடுதலையாய் இருக்கவில்லை . காவலர்களின் நிரந்திர கண்காணிப்பில் அவர் இருந்திட நேர்ந்தது .வீட்டிற்கு வெளியே சுதந்திரமாக சுற்றுவதற்கு கூட அவர்க்கு அனுமதியளிக்கப்படவில்லை .

இந்த கண்காணிப்புடன் கூடிய விடுதலையைப் பெற்று ஓராண்டு நிறைவடைவதற்குள் செய்யித் குதுப் மீண்டும் கைது செய்யப்பட்டார் . இந்த முறை அவருடன் சேர்ர்ந்து சகோதரர் முஹம்மது குதுப் ,சகோதரிகள் ஆமினா குதுப் , ஹமீதா குதுப் உட்பட 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஹ்வான்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்பட்டனர் . இவர்களில் 700 பேர் பெண்கள் .

1965 ஆகஸ்டில் ஜீஸாஃ நகரத்திற்கு அருகே உள்ள கர்தஸாஃ என்னுமிடத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலை காரணங்காட்டி அரசாங்கத்தை கவிழ்பதற்கும் அதிபரை கொலை செய்வதற்கும் இஹ்வான்கள் சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்கின்ற கற்பனை குற்றஞ்சாட்டின் பேரில்தான் இந்த முறை இஹ்வான்களின் மீது அடக்குமுறை கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன .

காதர்ஸாஃ சம்பவம் நிகழும்போது அதிபர்  நாசர் ரஷ்ய சுற்றுபயனத்தை மேற்கொண்டிருந்தார் .மாஸ்கோவில் இருந்த  அதிபருக்கு செய்தி அறிவிக்கப்பட்டது . உடனே அவர் அங்கிருந்து ஒரு அறிவிப்பை செய்தார் "எனது அரசை கவிழ்பதற்கும் என்னை படுகொலை செய்வதற்கும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினரை சார்ந்தவர்கள் தீட்டியுள்ள சதித்திட்டம் இதிலிருந்து புலனாகிறது . இதற்கு முன் நான் அவர்களை மன்னித்துவிட்டேன் . இனி நான் அவர்களை மன்னிக்க போவதில்லை .இதனை தொடர்ந்துதான் இஹ்வான்களின் ஒட்டுமொத்த சிறையடைப்பு நிகழ்ந்தது .

இதற்கு ஓராண்டிற்கு முன் அதாவது 1964 மார்ச் 24 ஆம் நாள் எகிப்தில் அதிபருக்கு சில சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது . இதன் படி விசாரணை இன்றி எவரையும் கைது செய்யலாம் . அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது . இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் உரிமை கூட எவருக்கும் கிடையாது .

நாசரின் மாஸ்கோ அறிவிப்பை தொடர்ந்து நாடெங்கிலும் இஹ்வான்கள் வேட்டையாடப்பட்டனர் .சிறைக்கூட சித்ரவதைகள் அதிகரித்தன . அடுத்த சில நாட்களில் ராணுவ நீதிமன்றங்களில் விசாரணை துவங்கின . வழக்கு மன்ற காட்சிகள் நேரடியாக தொலைக்காட்சியின் வழி அஞ்சல் செய்யப்படும் என அரசு அறிவித்தது . எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தும் ,மிருகத்தனமான சிறைகூட சித்ரவதைகளை விவரித்தும் கூறும் காட்சிகள் ஒளிப்பரப்பாவது கண்டும் அந்த ஏற்பாடு உடனடியாக கைவிடப்பட்டது . பிறகு பூட்டப்பட்ட அறைக்குள் விசாரணைகள் நடந்தன . குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட வழக்குரைஞர்கள் கூட அனுமதியளிக்கப்படவில்லை .

இறுதியாக 1966 ஆகஸ்டு 25 ஆம் நாள் செய்யித் குதுப் அவர்களுக்கும் , அவர்களுடன் சக ஊழியர்களான , அப்துல் ஃபத்தாஹ் இஸ்மாயில் , யூசுப்ஃ ஹவாஸ் ஆகிய இருவருக்கும் நாசரின் எதேச்சதிகார கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது .

ஆட்சி கவிழ்ப்பும் , அதிபர் படுகொலைக்கும் சதி திட்டம் தீட்டி செயல்பட்டதாக கூறும் கற்பனை குற்றச்சாட்டுகளுடன் , செய்யித் குதுபின் கடைசி நூலான " மெயில் கற்கள் " இல் இருந்து சில பகுதிகளும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தன .

1966 ஆகஸ்டு 29 ஆம் நாள் அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது . செய்யித் குதுப் தூக்கில் இடப்பட்டார் . இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எகிப்து வீரத்திருமகனை இழந்தது ! இஸ்லாமிய உலகம் சிறந்த சிந்தனையாளரையும்,மகத்தானதொரு சமூக சிற்பியையும் இழந்தது !!
3 comments:

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

சொடுக்கி கேளுங்க‌ள்

2. >>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
. <<<<<

.

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

பகிர்வுக்கு நன்றி

தின்னைத் தோழர்கள் பதிப்பகம்
இமாம் ஹஸனுல் பன்னா அவர்களின் வரலாறை தனிப் புத்தகமாக வெளியீட்டு இருக்கிறார்கள் முடிந்தால் அதையும் அறிமுகப்படுத்துங்கள்

நானும் ஒரு தின்னத் தோழர்களின் புத்தகத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறேன் பாருங்கள்

http://valaiyukam.blogspot.com/2011/02/blog-post_16.html

Adirai Iqbal said...

அலைக்குமுஸ்ஸலாம் சகோ
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கின்றேன்

Post a Comment