test

Thursday, January 5, 2012

ஈரானின் எண்ணெய் மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியது

 

ஹெமஸ் நீரிணை
- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -
ஈரானின் மீதான தடைகள் அதன் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளைத் தடுக்கும் எனினும் அது இலகுவாக வாடிக்கையாளர்களை மாற்றிக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது என்ற முடிவுக்கு ஐரோப்பிய அரசுகள் கொள்கையளவில் இணங்கியுள்ளன.

ஈரானில் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தீவிரப்படுத்தப்படும் இத்தகைய தடைகள் ஈரான் அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்ட மேற்படி விரைவில் எதிர்பார்க்கப்படும் தடை மற்றும் புதுவருடத்துக்கு முந்திய இரவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் ஒப்பமிடப்பட்டு சட்டமாக்கப்பட்ட தடைகளும் சேர்ந்து ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக செறிவுபடுத்தப்பட்ட தடைகளை ஏற்படுத்தும் மேற்கின் முயற்சிகளாக நோக்கப்படுகின்றன.

தனது அனுத் திட்டங்கள் மிகவும் அமைதியானவை என்றும், நாட்டின் மின்சக்தித் தேவைகளுக்காகவே தான் அதை முன்னெடுப்பதாகவும் ஈரான் கூறி வருகின்ற போதும், நவம்பர் மாத ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி மேற்குலக நாடுகள் ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்க முற்படுகின்றது என குற்றம் சாட்டி வருகின்றன. அனுத் திட்டம் தொடர்பில் தெஹ்ரானுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்துக்கு முன்னர் முறிவடைந்திருந்தன.

ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்களின்படி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கடந்த டிசம்பரின் இறுதி நாட்களில் குறித்த தடை தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தனர் என்றும் தடைக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட எந்தவொரு ஆட்சேபணையும் இதன்போது கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதும், தனது எண்ணெய் இறக்குமதியின் மூன்றில் ஒரு பகுதியை ஈரானிடமிருந்து பெறுவதும், தெஹ்ரானின் கடுமையற்ற நிதி உதவிகளில் தங்கியிருப்பதுமான கிரீஸ் இவ்வாறான ஆட்சேபணை ஒன்றை எழுப்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈரானிய மொத்த மசகு எண்ணெய் ஏற்றுமதியான நாளொன்றுக்கு 2.6 பில்லியன் பரல்களில் நாலரை இலட்சம் பரல்களை இறக்குமதி செய்வதுடன், சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிடம் பெருமளவு எண்ணெய் கொள்வனவு செய்யும் பிராந்தியமாக விளங்குகின்றன.
தடையின் தாக்கம்:

மசகு எண்ணெய் விலையில் திடீர் அதிகரிப்பை மேற்படி தடை குறித்த செய்திகள் ஏற்படுத்தியிருந்தன. எண்ணெய் விலைக்கான பிரென்ட் சுட்டி புதன்கிழமை பரல் ஒன்றுக்கு 114 அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. செவ்வாய்க்கிழமையிலும் பார்க்க இது 2 டொலர்கள் அதிகமாகும்.
தனது எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் எந்த நடவடிக்கையும் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தக் காலகட்டத்தில் உலக எண்ணெய்ச் சந்தைகளில் பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரித்திருந்தது மாத்திரமன்றி கடந்த வாரங்களில் அதிகரித்த அளவிலான தீவிர ராணுவப் பயிற்சிகளை அது நடத்தி வருகின்றது.
கடந்த மாதம் ஹொமுஸ் நீரிணையை மூடிவிடப்போவதாக ஈரான் பயமுறுத்தியிருந்ததுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இந்நீரினையினூடாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் எதுவும் பயணிக்க முயற்சிக்குமாயின், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. பாரசீக வளைகுடாவிலிருந்து விற்கப்படும் எண்ணெயின் 40 சதவீதம் எடுத்துச் செல்லப்படும் வாயிலாக ஹொமுஸ் நீரிணை விளங்குகிறது.

பல வருடங்களாக மேற்கு நாடுகள் ஈரானின் மீது விதித்து வந்த பொருளாதாரத் தடைகள் அதற்கு சிறிய தாக்கங்களையே ஏற்படுத்தியிருந்தன எனினும், அண்மைய நடவடிக்கைகள் முந்தைய தடைகளில் இருந்தும் வேறுபட்டு ஈரானின் பொருளாதாரத்தில் 60 சதவீதத்தை கொண்டிருக்கும் எண்ணெய் வர்த்தகத்தை நேரடியாக இலக்குவைத்தவையாக அமைந்திருந்தன.

குறித்த எண்ணெய் இறக்குமதித் தடை ஈரானை புதிய வாடிக்கையாளர்களை தேடுவதற்கு நிர்பந்திக்கும் எனினும், தனக்கு இதனால் பிரச்சினை ஏதும் இல்லை என்றே அது வலியுறுத்துகின்றது.
“நாங்கள் மிக இலகுவாக வாடிக்கையாளர்களை மாற்றிக் கொள்வோம்” என ஈரான் தேசிய எண்ணெய் கம்பனியின் சர்வதேச பணிப்பாளர் S M. கஸ்மானி இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆயினும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டிருக்கும் அண்மைய தடைகள் ஈரானின் தற்போதைய எண்ணெய் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. குறித்த தடைகளால் தன்னுடன் பலத்த சவால்களுக்கு மத்தியில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் வாடிக்கை நாடுகளுக்கு அதிக விலைக்கழிவுகளை வழங்க ஈரான் நிர்ப்பந்திக்கப்படும். இது அதனது வருமானத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஈரானின் மிக அதிகளவு எண்ணெய் வர்த்தக நாடான சீனா கடுமையான விலை தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருந்ததும் கடந்த மாதம் தனது எண்ணெய்க் கொள்வனவை பாதியாகக் குறைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி:

அநேக வர்த்தகர்கள் ஈரான் ஆசியாவில் தனது எண்ணெய்க்கான புதிய வாடிக்கையாளர் நாடுகளை கண்டுபிடிக்கும் என எதிர்பார்த்த போதும், அதற்காக ஈரான் கொடுக்க வேண்டிய குறிப்பிடத்தக்க அளவு விளைக்கழிவினால் ஏற்படும் வருமான இழப்பு தனது பிரஜைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக அது வழங்கும் மானியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்
.
கடுமையான தடைகளால் ஏற்படும் விளைவுகளான உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரிப்பை ஏற்கெனவே ஈரானின் வீதிகளில் காண முடிகின்றது.

ஈரானின் ரியால் நாணயம் கடந்த மாதம் மாத்திரம் டொலருக்கு எதிரான அதன் பெறுமதியில் 40 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள நாணயமாற்று நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் உள்ள தமது சேமிப்புகளை மீளப்பெற்று டொலர்களைக் கொள்வனவு செய்ய ஈரானியர்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

குறித்த பொருளாதார நெருக்கடி ஈரானின் பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கையில் மக்களால் உணரப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல், சர்ச்சைகள் நிறைந்த 2009 ஜானாதிபதித் தேர்தலுக்கு பிந்திய முதலாவது தேர்தலாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்திருந்த போதிலும், அவை ஆட்சியாளர்களால் வன்முறையைப் பாவித்து ஒடுக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment